Sunday, 6 July 2014

கண்ணீரின் ஒரு பாதி ; வாழ்க்கையின் மறு பாதி

விடுதலை இல்லை பிறந்தது ஏனோ !
விடுகதை கேள்வியே தொடர்வதும் ஏனோ !

பிறந்துவிட்டேன் ஒரு மானுடப்பிறவியாய்
உலகில்
படைக்கப்பட்டேன் ஒரு தீவுக்குள் துறவியாய்..

அன்புக்கு பஞ்சம் இல்லை
அள்ளித்தந்து அன்னை வளர்த்ததாலே
அணைப்புக்கு யாரும் இல்லை
அதைதராது தந்தை வஞ்சம் செய்ததாலே

அப்பா- மகள் உறவுக்கு
ஈடு இணை இல்லையாம்
மகளாய்தான் நானும் பிறந்தேன்
ஆனாலும் நான் ஒரு தொல்லையாம்..

சத்தம் போட்டு பேசியதாலே
சனியன் ஆகிப்போனேன் நான்
சங்கடப்பட்டு பேசியதாலே
சாக்கடை ஆகிப்போவேன் நான்
பிறந்ததில் இருந்தே அரியவில்லை
அப்பா என்பதன் அர்த்தத்தை
இறக்கும் போதேனும் உணரவேண்டும்
தப்பாத அன்பின் ஆழத்தை

பிழையில்லாத புன்சிரிப்பு
என்னுள் வந்தது எப்படியோ
அதைமட்டும் முகமூடியாய்
அணிந்தவள் கதைதான் இப்படியோ

ஆராதிக்க ஆள் இல்லை
இந்த
அடிமை வாழ்க்கை பிடிக்கவில்லை
பொய் சிரிப்பும் போலி ஆனது
அழுகை ஒன்றே நிறந்தரமானது..

ஆயிரம் கோடி வேண்டாம் – அப்பா
அன்பையே கேட்கும் மகள்
ஆடம்பரமே வேண்டாம் – இந்த
அடிமை வாழ்வை உடைத்திடுங்கள்

பட்டம் , பரிசு அனைத்தையும் நான்
காசு கொடுத்து வாங்கிடுவேன்
பாசம் என்பதை எங்கு வாங்க
பரிதவிக்கிறேன்
பதைபதைக்கிறேன்

ஒருமுறையேனும்
மகளே என்று உன் இரு உதடுகள் அசையாதா ?

ஒருமுறையேனும்
பாசத்தோடு உன் இரு கைகள் தழுவாதா ?

ஒருமுறையேனும்
அறவனைப்போடு உன் இரு விழிகள் பார்க்காதா ?

ஏங்குகிறேன் 
நாளெல்லாம்
ஏற்றம் எனக்கு எப்போது
தேடுகிறது என் மனமெல்லாம்
மகிழ்ச்சி அடைவது எப்போது..

கோபிக்க மகள் வேண்டும்
திட்டிதீர்க்க மகள் வேண்டும்
திருப்பி ஒரு வார்த்தை கேட்டாலும்
சோறு கிடைக்காது பசியே மிஞ்சும்

அன்பை கேட்டு கெஞ்சி கெஞ்சி – வீட்டில்
பிச்சைகாரி ஆனேன் நான்
அலைகழித்து ஒதுக்கபட்டு
பிறந்ததே பாவம் எனக் கொண்டேன் நான்..

முடியவில்லை இதற்க்கு முடிவும் இல்லை
வழி இருந்தால் சொல்லுங்களேன்
வலி இல்லா வாழ்க்கை வாழ !

ஊமையாய் நானும் பிறந்திருக்கலாம்
என் பேச்சு துயரம்
தந்திருக்காது  !
குருடாய் நானும் பிறந்திருக்கலாம்
என் பார்வை
உன்மீது விழுந்திருக்காது  !
செவிடாய் நானும் பிறந்திருக்கலாம்
உன் திட்டு எனக்கு
கேட்டிருக்காது  !
முடமாய் நானும் பிறந்திருக்கலாம்
என் வாழ்வு
உன்னோடு தொடர்ந்திருக்காது !

சக்தி இழந்து போனேன் நான்
சங்கடத்திலே என் வாழ்வு
விரக்தி அடைந்து போனேன் நான்
வேதனை தருது உன் பிரிவு

கண்ணீருக்கு பிறந்தவள் நான்
எழுதிதீர்த்தே கரைகின்றேன்

உலகில் எங்கு நான் இருந்தாலும்
தேடும் உன் அன்பே உயிர்மூச்சு
மௌனமாகி நான் இறந்தாலும்
என் எழுத்துக்கள் பேசும் பலபேச்சு

அன்பை கூட தறாத – இப்படியொரு
அப்பாவுக்கு மகளாய்த்தான்
அடுத்தொரு பிறவியும் தொடரும் என்றால்

ஜனனம் எனக்கு வேண்டாம் – இறைவா
மரணம் இன்றே நிகழ்ந்திடட்டும்..............


கவிதை இல்லை இது ஒன்றும்
என்
கண்ணீரின் ஒரு பாதி..
வார்த்தை இல்லை இது ஒன்றும்
என்
வாழ்க்கையின் மறு பாதி..



-    சௌந்தர்யா -

No comments:

Post a Comment