Sunday, 28 September 2014
விழி இல்லை
வழி உண்டு
.
.
.
சூரிய ஒளியை பார்த்ததில்லை
நிலவின் அழகை ரசித்ததில்லை
கருவில் இருந்து வெளிவந்தும்
பகலிலும் நான் இரவையே கண்டேன்
சோதனை கண்டதுண்டு
சோகங்கள் கண்டதுண்டு
பட்டினி கண்டதுண்டு
பதற்றம் கண்டதுண்டு
வன்மம் கண்டதுண்டு
வலிகள் கண்டதுண்டு
கண்டதில்லை
வானம் எதுவென
கண்டதில்லை
பூமி எதுவென
கண்டதில்லை
விளையும் பயிர்கள்
விருட்சப்பூக்கள்
விண்மீன் ஒளிகள்
இப்படி இன்னும் பல பல
கற்பனையின் பல ஓவியங்கள்
கண்முன்னே இருக்கிறது
கனவினிலே பல கலைகள்
காத்துதினம் கிடக்கிறது
விளக்கில்லை
விழியும் இல்லை
இருந்தும்
நான் வெற்றி அடைவதில்
ஒரு பொழுதும் ஐயமில்லை
கண் இல்லை என்றாலும்
கனவுகள் இருக்கிறது
பார்க்கவில்லை என்றாலும்
பாதைகள் தெரிகிறது
---சௌந்தர்யா---
Saturday, 27 September 2014
திருமணம்
.
.
.
ஆறடியில் வளர்ந்த போதும்
ஆண்மையிலே சிறந்த போதும்
வீரத்தில் விளைந்த போதும்
பாரத்தால் சரிந்த போதும்
மனைவிக்கு செல்ல பிள்ளை
மீசை வைத்த முதல் பிள்ளை
காலந்தோரும் காத்திடுவாள்
காதலித்தே கவர்ந்திடுவாள்
தாய் வீட்டில் இருந்தாலும்
தாரமாக சென்றாலும்
தாலி கட்டி முடித்துவிட்டால்
தன்னையே தாரைவார்த்து தந்திடுவாள்
உலகினிலே உயர்ந்த உறவு
தொப்புல்கொடி மட்டும் அல்ல
கணவனுக்கும் மனைவிக்கும்
பிரித்தாலும் பிரியாத
மாங்கல்யம் ஒன்று என்றும்
இறைவன் படைத்த இயற்க்கையில்
அதிசயிக்க கூடிய உறவு !!!
---சௌந்தர்யா---
Sunday, 21 September 2014
மூன்றெழுத்தின் முகவரி
.
.
.
இரசிக்க வைக்கும் கவிதை மூன்றெழுத்து
இரசிப்பை சொல்லும் அழகு மூன்றெழுத்து
தொடர்பை கொடுக்கும் உறவு மூன்றெழுத்து
உயிரை அளிக்கும் மூச்சு மூன்றெழுத்து
தடுத்தாலும் ஓடும் நேரம் மூன்றெழுத்து
தவித்தால் வரும் தாகம் மூன்றெழுத்து
தவிப்பால் வரும் அழுகை மூன்றெழுத்து
தானாய் வரும் அன்பு மூன்றெழுத்து
கேட்க தோன்றும் பாடல் மூன்றெழுத்து
கேட்டால் தொடங்கும் ஆடல் மூன்றெழுத்து
பேசித்தீர்க்கும் இதழ் மூன்றெழுத்து
பேசாதிருக்கும் மௌனம் மூன்றெழுத்து
எட்ட எட்ட போகும் தூரம் மூன்றெழுத்து
எட்டாதிருக்கும் வானம் மூன்றெழுத்து
மழை நனைக்கும் ஈரம் மூன்றெழுத்து
மலர்கள் கொடுக்கும் மணம் மூன்றெழுத்து
ஆத்திரப்படும் கோபம் மூன்றெழுத்து
அதனால் வரும் சோகம் மூன்றெழுத்து
விழுந்தால் வரும் காயம் மூன்றெழுத்து
வியப்பை கொடுக்கும் மாயம் மூன்றெழுத்து
முரண்கள் தரும் பிரிவு மூன்றெழுத்து
தினமும் வரும் செலவு மூன்றெழுத்து
புது உறவு கொடுக்கும் பள்ளி மூன்றெழுத்து
புத்துணர்விக்கும் புகழ் மூன்றெழுத்து
வாழ்வை மாற்றும் காதல் மூன்றெழுத்து
வாழ்க்கை கொடுக்கும் நட்பு மூன்றெழுத்து
அறிவை வளர்க்கும் அப்பா மூன்றெழுத்து
உயிரை கொடுக்கும் அம்மா மூன்றெழுத்து
---சௌந்தர்யா---
Saturday, 20 September 2014
இசைக்கென கவி எழுத வந்தேன் – இங்கு
இசையே பலரை ஆளக்கண்டேன்
இருகிய மனமும் இளகிப்போகும்
இசைதன்னை கேட்கையிலே
இயங்கா இதயமும் இயங்கிப்போகும்
இசைவந்து தீண்டையிலே
ராகங்கள் பல உண்டு – அதை
ரசிக்காது யாரிங்கு
தேகங்கள் அதை கண்டு
தேடாது போவதெங்கு
மாயங்கள் இல்லை
மயங்குது விழி இரண்டும்
மந்திரங்கள் இல்லை – கேட்க
துடிக்குது செவி இரண்டும்
ஆடாத கால் இல்லை
கேட்காத செவி இல்லை
பாடாத இதழ் இல்லை
இன்னிசைக்கு எதுதான் எல்லை !!
ஆராத வலியைக்கூட
ஆற்றிவிடும் இந்தக்கலை
தீயான மனதைக்கூட
நனைத்துவிடும் இசையின்மழை ...
---சௌந்தர்யா---
Friday, 19 September 2014
எழுதத்தொடங்கிவிட்டேன் அப்பா
.
.
.
உலகில்
எட்டு வைத்த முதல் அடியும்
எழுதபட்ட முதல் வரியும்
உன்னால் தான் தொடங்கியது
உறவில்
தொட்டு சாய்ந்த முதல் மடியும்
தொடுக்கப்பட்ட முதல் கவியும்
உன்னைத்தான் தழுவியது !!!
அலாதிப்பிரியம் கொடுத்தாய் நீ – என்னை
அழாமல் அன்பால் தடுத்தாய் நீ
அகிலம் போற்ற வளர்த்தாய் நீ
அணைப்பில் எனக்கு முதல்தாய் நீ
சித்திரை மாத வெயிலானாலும்
நிழலாய் என்னை நீ தொடர்வாய்
மார்கழி மாத பனி ஆனாலும்
அணலாய் வந்து சுகம் தருவாய்
நான்
தடம் பதிக்க துடிப்பவன் நீ
தடுக்கி விழுந்தால் தவிப்பவன் நீ
தாயாய் என்னை காப்பவன் நீ – என்னை
தாலாட்டவே உலகில் பிறந்தவன் நீ !!
நெஞ்சில் சுமந்தே உறங்கவைப்பாய்
கையை பிடித்தே வளர்த்துவிட்டாய்
இல்லை என்பதே இல்லாமல் போகும்
இவ்வுலகில் நீ இருக்கும் வரை
மணவாழ்வு வேண்டாம் அப்பா
உன்னுடனே என்றும் இருக்கின்றேன்
மருமகள் பட்டம் வேண்டாம் அப்பா
மீண்டும் மழலையாகவே மாற விரும்புகிறேன்
தோழன் போல நீ இருக்க – உன்
தோல் சாய்ந்தே நான் இருக்க – என்றும்
தொல்லைகள் அன்றி வாழ்ந்திருக்க – ஏழ்
பிறவியிலும் உன் உறவாகவே நான்பிறக்க
நித்தமெல்லாம் என் பெயரை
நீ உறைத்தே வாழ்ந்திருந்தாய்
உன் மொத்தமெல்லாம் எனக்கென்றே
நீ உழைத்தே வாழ்வளித்தாய்
சித்தமெல்லாம் துடிக்குதப்பா – உனை
பிரிந்து போகையிலே
நம் வருத்தமெல்லாம் வழியுதப்பா – விழும்
கண்ணீர் துளிகலிலே !!!
அன்புடன்
---சௌந்தர்யா---
Sunday, 14 September 2014
“முகம் காட்டு முழுமதியே
அதுவே எனக்கு நிம்மதியே”
திசை தொலைத்து நின்றேனே – உன்னை
தினம் தேடி அலைந்தேனே
என் விழிகளுக்கு விருந்திடு
உன் கடை பார்வையாலே ;
என் செவிகளுக்கு தேன்சொட்டு
உன் ஒரிரு வார்த்தையாலே
பேரின்பம் பூக்கட்டும் – அன்பே
சிரிப்பை சற்று சிதறவிடு ;
மோட்சங்கள் கிடைக்கட்டும் – அன்பே
அருகில் வந்து அமர்ந்துவிடு
வார்த்தைகள் இல்லையே
நீ வருகை தந்தாலே ;
வசந்தங்கள் பொங்குமே
என் வாசலில் உன் பாதம் பட்டாலே
தொட்டு தொட்டு நீ பேசினாய்
என் மனதிற்க்குள் பேரலை ;
யாரை பார்த்தாலும் உன் யோசனை
இதுதானோ காட்சிப்பிழை ...
“நீ ஒருவரி பேசிப்பார்
மொழிகளும் வியந்துபோகும் ;
நீ விழிவழி கொஞ்சம் பார்
நிலவொளி தோற்றுப்போகும்”
உள்ளத்தில் மட்டும் இல்லை
என் உயிரின் பாதி நீயானாய் ;
எண்ணத்தில் மட்டும் இல்லை
என் எழுத்தின் முழுவடிவம் நீயானாய்
உன் உறவோடு வாழ விரும்புகிறேன்
ரெண்டில் ஒன்று சொல்லிவிடு ;
பிரிவை மட்டும் தருவதென்றால்
நீயே வந்து கொன்றுவிடு
---
சௌந்தர்யா ---
Saturday, 13 September 2014
எழுத்துக்குள் ஒழிந்திருக்கும்
என் ஏகபட்ட எண்ணங்கள்
எழுதவில்லை செதுக்குகிறேன்
இது இதயத்தின் தேடல்கள்
மறவாத மனிதனுக்குள்
என்னென்ன ஆசைகள்
மறைந்திருக்கும் மனதுக்குள்
நினைவுகளே இம்சைகள்
பிறப்பொன்று கண்டுவிட்டேன்
பிறந்தே இவ்வுலகினிலே
இறப்பின்வலி கண்டுவிட்டேன்
பல எதார்த்த சாவினிலே
வானத்தின் அழகுதனை
வானவில்லே கூட்டுதிங்கு
வானவில்லின் அழகுதனை
வண்ணங்களே மாற்றுதிங்கு
தினந்தோரும் சாலையில்
கானலையே காண்கின்றோம்
முழுநேர வேலையாய்
இணையதளத்தில் இணைகின்றோம்
கஷ்டங்கள் இஷ்டமில்லை – இங்கு
இஷ்டமெல்லாம் கஷ்டமில்லை
மாற்றங்கள் மாறுவதில்லை – இங்கு
மாறாதது எதுவுமில்லை
கால்தொட்டு கெஞ்சினாலும்
கடலோடு செல்வதில்லை கால்இரண்டும்
விரல்தொட்டு கொஞ்சினாலும்
வீணையோடே நிலைப்பதில்லை கையிரெண்டும்
எழாமலே உறங்குகின்றேன் – இன்னும்
என் கனவுகளே முடியவில்லை
எதார்த்தமாய் எழுதிவிட்டேன் - இங்கு
எதிர்பார்ப்புகள் எதுவுமில்லை
--- சௌந்தர்யா ---
Subscribe to:
Posts (Atom)