Thursday, 16 October 2014


























நீண்டதொரு பயணம் – அதில்
நீ மட்டும் வேண்டும்
முன்னும் பின்னும் நதிகள் – அதில்
நனையவேண்டும் நம் கால்கள்

பச்சை வண்ண மரங்கள் – அதில்
வாழும் பறவை கூட்டங்கள்
நிழலின் கீழ் நான் இருக்க
என் மடியில் நீ தலை சாய்த்திருக்க

பயிர்கள் எல்லாம் செழித்தது – உன்
பாதம் பட்டதாலோ – என்
உயிரும் கூட வாழ்வது – உன்
தேகத் தீண்டலாலோ             

அழகான உன்னை நான் – என்
கவிதைக்குள் ஒழித்துவைத்தேன்
அளவிலாது அதை படித்தே – என்
ஆயுள்தனை நான் கடப்பேன்

வின்மீண்கள் பல கோடி – நீ
நிலவடி என் தோழி
அழகிற்கு அகராதி – உனக்கு
எழுதுவேன் பல அந்தாதி

வான்மேகம் வருகிறது – உன்
வார்த்தைகளை கேட்கத்தான்
வானவில்லும் வருகிறது – உன்
வண்ணங்களை கேட்டுத்தான்

அதிசயத்தில் ஒன்றல்ல – இருந்தும்
அதிசயபிறவி நீயடி
அலங்காரம் ஏதுமல்ல – இருந்தும்
 நீ அறுபதிலும் அழகியடி

நீ விழிமூடி திறக்கும்போதே
பகல் இரவை நான் உணர்ந்தேன்
நீ கதைபேசி சிரிக்கும்போதே
இன்னிசையை நேரில் நான் கண்டேன்

பேரழகி நீ இருந்தால்
பேரின்பம் தானாய் வரும்
உலகழகி பட்டம் எல்லாம்
உனக்கு தானாய் தேடி வரும்

அன்னாந்து பார்க்காதே
சூரியனில் மழை அடிக்கும்
மண்ணை பார்த்து நடக்காதே
பூமிக்கும் உனை பிடித்துவிடும்

உன் காட்டருவி குழலாலே
கட்டி இழுத்து செல்வதேனோ
உன் தேன்சொட்டும் குரலாலே
எனை மயக்கி போவதேனோ

இச்சகம் எல்லம் போற்றும்படி
எப்பவும் நான் எழுதி எழுதி
புத்தகவிரும்பி உனக்கு நான்
ஒரு நூலகமே  பரிசளிப்பேன்

கோவில்கள் இங்கு பெரிதில்லை
அதைவிட புனிதமானவள்  நீயன்றோ
கடவுளும் இங்கு உயர்வில்லை
அதையும் தாண்டிய நீ தெய்வீக பெண்னன்றோ

எதுவும் உனக்கு கொடுத்ததில்லை
எதையும் நீ கேட்டதுமில்லை
இயல்பாய் பெருகிய நம் காதல்
சுட்டாலும் கருகாத வான்மேகங்கள்

என்றென்றும் புன்னகை
அதுவே என் முகவரி
எவர் போற்றி பாடினாலும்
அச்சிரிப்புக்குள் வாழ்வது நீயடி

ஓர்  உயிராய் உலகில் நீயிருக்க
உனையே உலகமாய் நான் நினைக்க

ஒரு பிரசவத்தில் படைக்கபட்டாய் நீ
பல பிரசவங்கள் கொடுத்து உன்
பிரவேசம் முடியாமல்
பக்கங்களில் எழுதியே உனக்கு
ஆயுள் தருகிறேன் நான் !


---சௌந்தர்யா---

2 comments: